கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வர் கலந்துகொண்ட ப்ரோமோ வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சி 10-வது சீசனை எட்டியுள்ள நிலையில், நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள ஃப்ரோமோவில் சிக்கபள்ளாபூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது போன்ற காட்சிகள் உள்ளது.
அந்த ப்ரமோவில், காங்கிரஸ் எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வர் மேள தாளம் முழங்க நடனமாடிக் கொண்டே பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதும், பின்னர், “போட்டியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி” என அவர் கூறுவதும் அந்த காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இந்தக் காட்சிகள் வெளியானதும் சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் வெடித்துள்ளது. சிலர் எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வரை கடுமையாக விமர்சித்து அவரின் செயலை மீம்ஸாக பதிவிட்டு வருகின்றனர்.
அதில், “எம்எல்ஏ ஒருவர் பிக் பாஸுக்கு செல்வது ஜனநாயகத்தில் ஒரு புதிய வீழ்ச்சி. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, பிரதீப் ஈஸ்வர் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் அடைந்திருந்து என்ன முன்னுதாரணத்தை காட்ட விரும்புகிறார்” என விமர்சித்துள்ளனர்.
வந்தே மாதரம் சமூக சேவை என்ற அமைப்பும் கர்நாடக சபாநாயகரிடம் எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வர் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ள கன்னட பிக் பாஸ் குழு, எம்எல்ஏ பிரதீப் ஈஸ்வர் விருந்தினராக, போட்டியாளர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பேச்சாளராக தான் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தார் என்றும், இதற்காக பெற்ற பணத்தை அனாதை இல்லத்துக்கு நன்கொடையாக வழங்க இருக்கிறார் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.