கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பரவி வரும் புதிய காய்ச்சலுக்கு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தக்காளி காய்ச்சல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் பாதிப்பு கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக உள்ளது. இதுவரை 85-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும் இந்த காய்ச்சளுக்கு டெங்கு அல்லது சிக்குன் குனியா காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தக்காளி காய்ச்சல் என்பது தொட்டால் பரவும் ஒரு தொற்று நோயாகும். எனவே இந்த நோயால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவரிடமிருந்து இடைவெளியை பின்பற்றுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சல் வந்தால் தொண்டை எரிச்சல், வாய் மற்றும் நாக்கில் புண், நீரிழப்பு, சருமத்தில் சிவப்பு நிறத்தில் கொப்புளங்கள், காய்ச்சல், சோர்வு, மூட்டு வலி, வயிற்றுப்பிடிப்புகள், குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு, இருமல், தும்மல், உடல் வலி போன்றவற்றையும் உண்டாக்கலாம். மேலும் சில நேரங்களில் இது கால்கள் மற்றும் கைகளின் நிறத்தையும் கூட மாற்றலாம். எனினும் எந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.