கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், அடுத்தாண்டு பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் அமைச்சர்கள் சேகர் பாபு, தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உள்ளிட்டோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது :
86 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடுத்தாண்டு பொங்கலுக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.
பிறக்கின்ற தமிழ் புத்தாண்டில் மக்கள் மகிழ்ச்சியோடு பயணிக்கின்ற வகையில் இந்த பேருந்து நிலைய திறப்பு விழா அமையும் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கரங்களால் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு அர்பணிக்கப்படும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் இந்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஏற்கனவே சோதனையோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.