தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் சென்னையை சேர்ந்த 5 இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோயில் திருவிழாவை காண சென்னை எழும்பூர் நேருபார்க் ஹவுசிங் போர்டில் குடியிருந்து வரும் சார்லஸ் மகன்கள் பிராங்கிளின்(23), ஆண்டோ(20) மற்றும் அவரது நண்பர்கள் கிஷோர்(20), கலையரசன்(20) மனோகரன்(19) உள்பட 17 பேர் சுற்றுலா பேருந்தில் வேளாங்கண்ணிக்கு சென்றனர்.
நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பூண்டி மாதா கோயிலுக்கு சென்ற அவர்கள் கொள்ளிடம் ஆறு அருகில் சமையல் செய்தனர். அப்போது பிராங்கிளின் உள்பட 5 பேரும் அங்குள்ள சந்தன மாதா ஆலயம் அருகே கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக 5 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் நீரில் இறங்கி தேடியபோது கலையரசன், கிஷோர் ஆகிய இருவரையும் சடலங்களாக மீட்டனர்.
மேலும், இந்த தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆற்றில் மூழ்கிய மேலும் 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மனோகர் உடலும் மீட்கப்பட்டது.
பின்னர் இருள் சூழ்ந்ததால் பிராங்கிளின், ஆண்டோ உடல்களை தேடும் பணி தடைபட்டது. இந்நிலையில் 2வது நாளான நேற்று பிராங்கிளின் உடல் மீட்கப்பட்டது.
உயிரிழந்த 5 பேரின் உறவினர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்றிரவு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்கு பின் உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்கள் ஒப்படைக்கப்பட்டது.
பலியான 5 பேரும் சென்னையில் புதிதாக துவக்கப்பட்டுள்ள கம்பெனியில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : உலகில் அதிக பிளாஸ்டிக் கழிவுகள் உருவாவது இந்தியாவில் தான்! – ஷாக் ரிப்போர்ட்!!
இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
சென்னை, எழும்பூர், நேருபூங்கா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 5 வாலிபர்கள், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு 8.9.2024 அன்று முற்பகல் திருச்சி-செங்கரையூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் கிழக்குப் பகுதியில் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது, கிஷோர், கலைவேந்தன், ஆண்டோ, பிராங்கிளின், மனோகர், ஆகிய ஐந்து நபர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.