கோத்தகிரி அருகே சோதனை சாவடியில் காவலர்களை இரண்டு மணி நேரம் சிறை வைத்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கடந்த ஒரு மாத காலமாக ஆண் காட்டு யானை ஒன்று உலா வருகிறது.
இந்த யானை சில நேரங்களில் வாகனங்களை தாக்குவதும், சாலையில் வாகனங்கள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று இரவு கோத்தகிரி மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில், குஞ்சப்பனை போலீசார் சோதனை சாவடியில் காவலர்கள் இரவு ரோந்து பணி மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறிய அந்த ஒற்றை ஆண் காட்டுயானை காவலர்கள் தங்கி உள்ள சோதனை சாவடி அருகே வந்தது.
இதனால் அச்சமடைந்த காவலர்கள் சுமார் இரண்டு மணி நேரம் சோதனை சாவடி கட்டிடத்திற்குள் முடங்கினர்.
இந்த நிலையில் இரண்டு மணி நேரம் சோதனை கட்டிடத்திற்குள் காவலர்களை சிறை வைத்த அந்த ஆண் காட்டு யானை யாருக்கும் எந்த இடையூறும் செய்யாமல் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. சிறை வைக்கும் காவலர்களை சிறை வைத்த காட்டியணையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.