10 ரூபா மருத்துவர் அசோகன் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.
சிதம்பரத்தைச் சேர்ந்த மருத்துவர் அசோகன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரம் நகரத்தில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். இவரை பொதுமக்கள் 10 ரூபா டாக்டர் என்றே அழைப்பார்கள்.
இவரின் சேவையை மதிக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் இவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளன. இவரது மருத்துவமனைக்கு வெளி மாவட்டங்கள், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலுள்ள ஏழை மக்கள் மருத்துவம் பார்ப்பதற்கு தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வார்கள்.
கடந்த ஆண்டு கரோனா நேரத்தில் பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையில் இவர் மருத்துவமனையை மூடாமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவம் பார்த்து வந்தாலும் இதுவரை மருத்துவமனைக்கு சொந்த கட்டடம் இல்லை. வாடகை இடத்திலேயே இவர் மருத்துவம் பார்த்து வந்தார். மிகவும் எளிய குணம் கொண்ட இவர், சிதம்பரம் பகுதியில் உள்ள ஏழை மக்கள் அதிகம் நாடி செல்லும் மருத்துவராக இவர் பணியாற்றி வந்து அனைவரின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
இந்நிலையில் மருத்துவர் அசோகன் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த செய்தி சிதம்பரம் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்து செல்பவர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.