குடும்பத்தில் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் தந்தைக்கு நிகர் யாரும் இல்லை அப்படிதான் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மென்பொறியாளர் ஒருவர் தாயுடன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் சிதம்பரம். இவருக்கு சுபா என்ற மனைவியும், முரளிபாரதி என்ற மகனும் இரு மகள்கள் இருந்த நிலையில் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.
வங்கியில் ஓய்வு பெற்று 10 ஆண்டுகளாக வீட்டில் இருந்து வந்த சிதம்பரம், கடந்த 30 தினங்களுக்கு முன்பு திடீரென மாரடைப்பால் உயிர் இழந்தார்.வீட்டில் இவரது மனைவி சுபாவும், அவரது மகன் முரளி பாரதியும் மட்டும் இருந்து வந்தனர்.
முரளி பாரதி மென்பொறியாளர் என்பதால் வீட்டில் இருந்தே பணி செய்து வந்தார். சிதம்ரம் உயிரிழந்த நாளில் இருந்தே கடந்த ஒரு மாத காலமாக தாய் மற்றும் மகன் இருவரும் யாரிடமும் பேசாமல் சோகத்தில் இருந்துள்ளனர்
சிதம்பரத்தின் 30வது நாள் நினைவு தினத்தை அனுசரித்துவிட்டு மிகுந்த மன வேதனையில் வீட்டில் இருந்த சுபாவும், மென்பொறியாளர் முரளி பாரதியும் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
மேலும் ,தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் டவுன் போலீசார் வாயில் நுரைதள்ளிய நிலையில் கிடந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
“அப்பாவை தேடிச் செல்கிறோம் யாரும் கவலைபட வேண்டாம் மகிழ்ச்சியுடன் வாழ்க” என்று தனது மகள்களுக்கு தற்கொலை கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு இந்த விபரீத முடிவை மேற் கொண்டது தெரியவந்தது
தாய் மகன் இருவரும் தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என தனித் தனியே எழுதி வைத்திருந்த கடிதங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வந்த மென்பொறியாளர் முரளி பாரதி தந்தை மீது கொண்ட அளவு கடந்த பாசத்தால் தன்னம்பிக்கை இழந்து இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.