ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் வரும் 14ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பின் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே தமிழகத்தில் உள்ள திருக்கோவில்கள் அனைத்தும் முறையான கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களுடன் மீண்டும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் டிசம்பர் 3ம் தேதி அன்று வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது.
ஸ்ரீரங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவது வழக்கம். பகல் பத்து தினம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாளை காலை அதிகாலை 4.45 மணி அளவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலின் சொர்க்கவாசல் திறக்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்வை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் வரும் 14ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக டிச.18ம் தேதி பணி நாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப்போல சொர்க்கவாசல் திறக்கப்பட்ட பின்பே பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.