உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தொழிலதிபர் குழந்தைகளின் கண் முன்னே தனது மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 37 வயதான தொழிலதிபர் ஒருவர் தான் இல்லாத நேரத்தில் தனது மனைவியின் இன்ஸ்டாகிராம் நண்பர்கள் தமது வீட்டு வருவதாக சந்தேகப்பட்டுள்ளார். இது அவர்களது உறவில் விரிசலை ஏற்படுத்தி, அவ்வப்போது சண்டைக்கு வழிவகுத்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் சுற்றுலா மற்றும் பயண நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது மனைவி இல்லத்தரசி. லக்னோவின் பாரா பகுதியில் வசித்து வரும், அந்த தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகளும், ஐந்து வயதில் ஒரு மகனும் உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று காலை ரேபரேலிக்கு காரில் பயணம் மேற்கொண்ட அவர்கள், அதிகாலை 5 மணியளவில், சுல்தான்பூரில் காரை நிறுத்திய கணவர், தனது மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இறுதியில் ஆத்திரமடைந்த அவர் தனது குழந்தைகள் கண் முன்னே தனது மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார். இந்த காட்சியை பார்த்து அவரது குழந்தைகள் கதறி அழுதுள்ளனர்.
தொடர்ந்து, அவர்கள் சென்ற கார் அங்கேயே நின்றுள்ளது. அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் இதுகுறித்து சந்தேகமடைந்து அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம், தங்களது தாயை தந்தை கொலை செய்து விட்டதாக அவர்களது 12 வயது மகள் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.