மதுரை சித்திரைத் திருவிழா:மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலரிடம் செங்கோலை ஒப்படைக்கப்பட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை சேர்ந்த தினகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை விழாவின் 8 -ஆம் நாள் பட்டாபிஷேகம் அன்று செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் கணவனை இழந்தவருக்கு செங்கோல் வழங்க கூடாது என்றும்,
தற்பொழுது அறங்காவலர் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல் ராஜன் கணவரை இழந்தவர் என்பதால் கோயில் விதிகளை அதாவது ஆகம விதிகளை பின்பற்றி அவரிடம் செங்கோலை வழங்க இயலாது. வேறு தகுதியான நபரிடம் செங்கோலை வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் -16 ஆம் தேதி நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ,” கோயிலுக்குள் இந்துக்கள் அனைவரும் தானே செல்கிறார்கள்? செங்கோல் வாங்குபவரும் இந்து தானே? கணவனை இழந்தவர் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது? குறிப்பாக விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டுள்ள கடைசி நேரத்தில் வழக்கை தொடர்ந்திருப்பது ஏன்? என சராமரியாக கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து,”இந்தக் காலத்திலும் இது போல கருத்துக்களை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் ,
அறங்காவலர் குழு தலைவர் செங்கோல் பெறுவதற்கு தடை விதிக்க முடியாது என கூறி நீதிபதி சரவணன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று சித்திரை திருவிழாவின் 8-ம் பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனைவ தொடர்ந்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் ருக்மணி பழனிவேல்ராஜனிடம், அம்மனிடம் இருந்து பெறப்பட்ட செங்கோல் வழங்கப்பட்டது. பின்னர், அவர் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோலை சேர்ப்பித்தார். அப்போது, அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனும் உடன் இருந்தார்.
(செங்கோல் வரலாறு :பாண்டியர்கள் மதுரையை ஆண்ட காலத்தில் பாண்டிய மன்னன் கையில் இருந்த செங்கோல் பட்டாபிஷேக நாளில் மீனாட்சி அம்மனிடம் ஒப்படைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதை குறிக்கும் வகையில் முன்பு ஆகமங்களின்படி அர்ச்சகர்களால் மதுரையை ஆட்சி செய்த மன்னர்களிடம் ‘செங்கோல்’ ஒப்படைக்கப்பட்டது.)