மதுரையில் ரயில் பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட 39 பேருக்கு உதவிகள் செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மிக பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்த ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இன்று அதிகாலை அந்த பெட்டியில் திடீரென தீ பற்றியது. இந்த விபத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 9 பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சட்ட விரோதமாக சிலிண்டரை கொண்டு வந்து ரயில் பெட்டியில் சமைத்ததே தீ விபத்துக்குக் காரணம் என தெற்கு ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பரமேஸ்குமார் குப்தா (55), அங்குலி ஹரியா (36), மனோரமா அகர்வால் (81), குமாரி ஹேமானி பேரியல் (22), மிதிலேஷ் குமாரி (62), சாந்தி தேவி வர்மா (57) ஆகிய 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எஞ்சிய 3 பேர் யார் என்பதை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் ரயில் பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட 39 பேருக்கு உதவிகள் செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறினார். பின்னர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.இதனிடையே, ரயில் பெட்டி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மூர்த்தி, தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.