கர்நாடகாவின் சிக்கபல்லபுரா அருகே இன்று காலை 2 முறை அடுத்தடுத்து மிதமான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வட வடகிழக்கு சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 07.09 மணியளவில் ஏற்பட்ட நில நடுக்கம், 11 கிலோ மீட்டர் ஆழத்தில் 3.6 ரிக்டர் அளவில் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து மீண்டும் காலை 07:14 மணியளவில் 23 கிலோ மீட்டர் ஆழத்தில் ஒரு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த மாதம் 12 ஆம் தேதி இதே மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு என மொத்தமாக 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள சிந்தாமணி, மிட்டஹள்ளி, உள்ளிட்ட நான்கு கிராமங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஒரு மாதத்திற்குள்ளாக மீண்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.