கொரோனா தொற்று பரவ தொடங்கிய ஆரம்ப காலம் முதல் குழந்தைகளிடம் ஆண்டிராய்டு போன்களின் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டது.
ஆன்லைன் வகுப்புகள் நடத்திய கொரோனா காலக்கட்டத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஆன்ராய்டு போன்களை பெற்றோர்கள் கொடுத்தனர்.
செல்போன் புழக்கம் குழந்தைகள் மத்தியில் சர்வசாதாரணமாக காணப்படுவதால் நாட்டில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதுவும், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா தொற்று பரவி, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். இதனால் செல்போன் பயன்பாடு மிகவும் அதிகரித்ததால் அது சைபர் குற்றங்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.
அத்துடன் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றதால், பெரும்பாலான குழந்தைகளுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் கிடைத்தது. ஆன்லைன் வகுப்புகளை தவிர, குழந்தைகள் செல்போனில் அதிக நேரம் செலவிட தொடங்கினார்கள்.
ஆன்லைன் வகுப்புகளை தவிர வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டராகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்த தொடங்கினார்கள். இது தான் சைபர் குற்றங்களுக்கு அடிகோளாய் அமைந்தது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் நடத்திய ஆய்வில் கடந்த 2020-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களில் கர்நாடகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அந்த காலக்கட்டத்தில் கர்நாடகத்தில் குழந்தைகளுக்கு எதிராக 144 சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகி உள்ளது.
இதில் 207 வழக்குகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 197 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் 2-வது இடத்திலும் உள்ளது. 126 வழக்குகளுடன் கேரளா 4-வது இடத்திலும், 71 வழக்குகளுடன் ஒடிசா 5-வது இடத்திலும் உள்ளது.
கர்நாடகத்தில் பதிவாகி உள்ள 144 சைபர் குற்ற வழக்குகளில் 122 வழக்குகள் பாலியல் சம்பந்தப்பட்டவை என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாகும். குழந்தைகள் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி கிடப்பதால், இதனை பயன்படுத்தி கொள்ளும் காமகொடூரர்கள் தங்கள் காமவலைகளை குழந்தைகள் மீது வீசுகிறார்கள். இதனால் தான் பாலியல் ரீதியான சைபர் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2020-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 1,340 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த வழக்கு நடப்பாண்டில் இன்னும் அதிகரிக்கும் என்றுஅஞ்சப்படுகிறது.
குழந்தைகள் உரிமை அறக்கட்டளை இயக்குனர் கூறுகையில், ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளின் கைகளில் ஆண்ட்ராய்டு செல்போன் கிடைத்துள்ளது. குழந்தைகள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நிறுத்த வேண்டும்.
ஆன்லைன் வகுப்புகளுக்காக இணையத்தை அதிகளவு பயன்படுத்தும் குழந்தைகள், இத்தகைய சைபர் குற்றங்களில் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சைபர் குற்றங்களுக்குள்ளாவது கவலை அளிக்கிறது. சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் படங்களை பகிரும் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இது தான் சைபர் குற்றவாளிகளை குற்றங்களில் ஈடுபட தூண்டுகிறது என்றார்.
பெங்களூரு மாநகர துணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் கூறுகையில், சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் என்னென்ன விஷயங்களை பகிருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் என்ன செய்கிறார்கள் என்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் தெரியாத நபர்களுடன் உரையாடல், தொலைபேசி எண், முகவரி உள்பட தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்வது போன்றவை சைபர் குற்றங்களில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்றார்.