இந்தியாவில் அதிக வெளிநாட்டவரால் கவரப்பட்ட இடம் என்ற அந்தஸ்தை தாஜ்மகாலிடத்தில் இருந்து மாமல்லபுரம்(Mamallapuram)பறித்து கொண்டது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 984 பேர் மாமல்லபுரத்தை பார்த்து சென்றுள்ளனர். தாஜ்மகாலை வெறும் 38,000 பேரே பார்வையிட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு 2021-2022 ஆம் ஆண்டு சுற்றுலாப்பயணிகள் பற்றிய விவரங்களை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 2021 – 22 ஆம் ஆண்டு அதிக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்த மாநிலங்கள் வரிசையில் மகாராஸ்டிரா 12 லட்சத்து 60 ஆயிரம் பேருடன் முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாடு 12 லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகையில் தமிழ்நாடு(Tamil nadu) முதலிடத்தில் உள்ளது. 11 கோடியே 50 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அடுத்த இடங்களில் உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஸ்டிர மாநிலங்கள் உள்ளன.
சென்னையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மாமல்லபுரம் இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த இடமாக உள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் 1,44,984 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மாமல்லபுரத்துக்கு (Mamallapuram )வருகை தந்துள்ளனர்.
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மகாலை காண 38,922 வெளிநாட்டு பயணிகளே வந்துள்ளனர். இந்தியாவில் வெளிநாட்டவர்கள் காண விரும்பும் 10 இடங்களில் 6 இடங்கள் தமிழகத்தில் உள்ளன.
மகாபலிபுரம் அருகேயுள்ள சாலுவக்குப்பத்திலுள்ள பாறையில் வடிவமைக்க புலி குகை கோவில், செஞ்சி கோட்டை, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வல்லக்கோட்டை, திருமயம் கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தன்னவாசல் மற்றும் அங்குள்ள ஜெயின் கோயில்கள் வெளிநாட்டவரை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.
இவற்றுக்கு அடுத்தபடியாக ஆக்ரா கோட்டை, குதூப்மினார், செங்கோட்டை போன்றவை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சுற்றுலாத்துறையில் பெரியதாக பேசப்படும் கேரள மாநிலம் இந்த பட்டியலில் பெரிய அளவில் இடம் பெறவில்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.