மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ராகுல் காந்தியின் (Rahul Gandhi) ட்வீட் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் 3ம் நாளான நேற்று, மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டும் என்று மாநிலங்களவையில் தொடர்ந்து முழக்கமிட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை, இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக அவை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடர்ந்து முடங்கிவருகிறது.
இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ராகுல் காந்தி(Rahul Gandhi) ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில்“மணிப்பூரில் அமைதியை மீண்டும் கொண்டுவருவோம்” “இந்தியா என்ற கருத்தை மணிப்பூரில் இருந்து மீண்டும் உருவாக்குவோம்;எங்களை எப்படி
வேண்டுமானாலும் அழையுங்கள், நாங்கள் I.N.D.I.A;
மணிப்பூரில் உள்ள ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தையின் கண்ணீரை துடைக்கவும், மாநிலத்தை மீட்டெடுக்கவும் நாங்கள் உதவுவோம்; மக்கள் அனைவரிடையே அன்பையும் அமைதியையும் மீண்டும் திரும்பக் கொண்டு வருவோம்”என தெரிவித்துள்ளார்.