தென்னை நார் பொருட்கள் உற்பத்தியில் ஒவ்வொரு முறையும் மக்கள் விரோதச் செயல்களைச் செய்து விட்டு, எதிர்ப்பு வரும்போது பிறர்மேல் பழி போடும் மூன்றாம் தரப் போக்கை ஊழல் திமுக எப்போது நிறுத்தும்?என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
திமுக அரசின் இந்த நிலைப்பாட்டால், அன்னிய செலாவணி மற்றும் உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்பு மற்றும் தென்னை நார் பொருட்கள் உற்பத்தி பெரிதளவில் பாதிக்கப்பட்டன. மேலும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழிலினை ஆரஞ்சு வகை (Orange Category) என உத்தரவு பிறப்பித்ததால், மின்கட்டண மானியம் கிடைக்காமலும், அதிகப்படியான மின் கட்டண உயர்வாலும், தென்னை நார் தொழிற்சாலைகள் இயக்கம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.
ஒரு தொழிலையே சீர்குலைத்து, உற்பத்தியாளர்கள் மற்றும், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குரியாக்கிய திமுக, இன்று தென்னை நார் தொழிலை மீண்டும் வெள்ளை தொழிலாக மாற்ற வேண்டும் என்று தமிழக அமைச்சர் திரு மெய்யநாதன் அவர்கள் தலைமையில், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் சிங் யாதவ் அவர்களை சந்தித்துக் கோரிக்கை வைத்திருக்கிறது.
வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வகைக்கு மாற்றி, ஒட்டு மொத்த தென்னை நார் தொழிலையே முடக்கிய திமுக, இன்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுவது, வழக்கம்போல மக்களை ஏமாற்ற திமுக ஆடும் கபட நாடகம் ஆகும்.
தாங்கள் செய்த தவறுகளுக்கு, மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது பழி போட்டு, தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது திமுக.
ஒவ்வொரு முறையும் மக்கள் விரோதச் செயல்களைச் செய்துவிட்டு, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அதனை மடைமாற்றி பிறர் மேல் பழி போடும் மூன்றாம் தரப் போக்கை திமுக எப்போது நிறுத்தும்?திமுக ஆட்சிக்கு வந்த 1967 ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு முறை ஆட்சியில் இருக்கும்போதும்,
இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் தொடங்கி, தமிழகத்தின் ஒவ்வொரு தொழில் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போட்டு, தங்கள் குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் நடத்தும் தொழில்களுக்கு மட்டும் ஆதரவாகச் செயல்பட்டு, ஏழை எளிய தொழிலாளர்கள் வயிற்றிலடிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ள திமுக, இன்று தென்னை நார் தொழில் துறையையும் முடக்கி விட்டு, மத்திய அரசு அதனைச் சரி செய்ய வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான சுயநல அரசியல்.
திமுகவின் இந்த அற்ப அரசியல் நாடகங்களை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.