மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துருப்புக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதை அடுத்து ஆப்கானிஸ்தனில் தாலிபான் அரசு அமைந்துள்ளது.
இதனை அடுத்து தாலிபான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்புத்தெரிவித்து வந்தன.
ஏற்கனவே உணவு பஞ்சத்தில் உள்ள ஆப்கானிஸ்தனில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சர்வதேச உதவி மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துகளுக்கான அணுகலை முடக்கியதால் நாடு மிகவும் மோசமாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் அவ்வப்போது இயற்கை அழிவுகளும், பயங்கரவாத தாக்குதல்களும் நடைபெற்று வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் மேற்கு மாகாணத்தில் உள்ள காதிஸ் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஐந்து பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
மேலும் இந்த நிலநடுக்கம் இந்த மாகாணத்தில் உள்ள முக்ர் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆனால் உயிரிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுள்ளது.
2015 ஆம் ஆண்டில், தெற்காசியா முழுவதும் மலைத்தொடரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 280 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது