மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இரண்டும் மூன்றாம் அலையாக வேகமாகபரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று ஒரேநாளில் 26,533 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 லட்சத்து 79 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா மூன்றாவது அலையில் பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், திரையுலக பிரபலங்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட ஒருசில அரசியல் பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னையில் உள்ள அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது கட்சியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விரைவில் குணமாக வேண்டும் என அவரது கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.