இன்றைய நவீன காலக்கட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதே மிகவும் அரிதான ஒன்றாக மாறிவருகிறது. புதிதாக திருமணமானவர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்கள் என அனைவருக்கும் குழந்தை கருத்தரிப்பதில் பிரச்சனைகள் அதிகமாக உள்ளது.
அதற்கு முக்கிய காரணமாக தற்கால உணவு பழக்க வழக்கம், போதிய அளவிலான உடற்பயிற்சி இல்லாதது. அந்த காலத்தில் ஆடுகல்லில் மாவு அரைத்து, அம்மியில் மசாலா அரைத்து உடலுக்கான வேலையை அதிகமாக எடுத்துக்கொண்டு ஆரோக்யமான பெண்கள் இருந்த காலம் போயி, சொகுசு வாழ்க்கையை நோக்கி நகர்ந்துள்ளதால் பல்வேறு பிரச்சனைகள் உடல் ரீதியாக ஏற்படுவதற்கு மூலக்காரணியாக அமைகிறது.
அப்படி இருக்க குழந்தை பெற்றுகொள்வதற்கே இளம் தலைமுறையினர் அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. சுகப்பிரசவத்தை கண்டு அஞ்சி அறுவை சிகிச்சை முறைக்கு வேகமாக முன்னேறி வருகின்றனர் இளம் தலைமுறையினர். இதனால் ஏற்படுகின்ற பின்விளைவுகள் குறித்து எச்சரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு!
அறுவை சிகிச்சைக்கு மாறும் இளம் தலைமுறை:
குழந்தை பெற்றுக்கொள்ள இளம் தலைமுறையினர் தற்போது சுகப்பிரசவத்தை தவிர்த்து நவீன மயமாக்கப்பட்ட அறுவை சிகிச்சைக்கு மாறுவது நல்லது அல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 50 வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டிலும் 5 குழந்தைகளில் இருந்து 10 குழந்தைகள் வரை பெற்றெடுத்தார்கள். இந்த பிரசவ முறை அனைத்தும் பெரும்பாலும் சுகப்பிரசவமாகவே இருந்தது. காலப்போக்கில் ஒவ்வொரு வீட்டிலும் 3 குழந்தைகள், பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற நிலையில், பின்பு நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலையில் தற் போது ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பார்ப்பது அரிதாகிவிட்டது.
இதற்கு குடும்ப சூழ்நிலை, குழந் தைகளின் படிப்பு செலவு, தனிந பர் வருமானம், உணவு பழக்க வழக்க முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். மேலும், குழந்தை பெற்றெடுப்பது என்பது பெண்களுக்கு மறுபிறவி என கூறுவர். 30 வருடங்களுக்கு முன்பு வரை அறுவை சிகிச்சை என்றால் பொதுமக்கள் பயந்து வந்த காலகட்டம் மாறி, தற்போது இளைய தலைமுறையினரே எங்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் என தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பலவிதமான கார ணங்களையும் அவர்கள் முன்வக் கின்றனர். பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் முடிந்தவரை குழந்தை பெற்றுக்கொள்ள வரும் பெண்களுக்கு நார்மல் டெலிவரி பார்க்கப்படுகிறது. அதில் ஏதாவது சிக்கல் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது.
ஆனால் சில தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் அறுவை சிகிச்சை முறையே பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் தனியார் மருத்துவமனைகள் அதிகப்படியான வருமானம் ஈட்டுவதாகவும், ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மருத்துவமனை சார்பில் பரிந்துரைக்கப் பட்ட காலம் மாறி தற்போது கடந்த இரண்டு வருடங்களாக குழந்தை பெற்றுக்கொள்ள போகும் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நல்ல நேரம் பார்த்து, எந்த நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என சொல்கின்றனர்.
இதுகுறித்து பெரம்பூரை சேர்ந்த தனியார் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், “முன்பெல்லாம் வீட்டிற்கு 2 அல்லது 3 பெண் பிள்ளைகள் இருப்பார்கள். அவர்கள் பிரசவத்திற்கு வரும் போது அவர்களது பெற்றோர் நார்மல் டெலிவரி தான் வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது வீட்டிற்கு ஒரு பெண் பிள்ளை மட்டுமே உள்ளது. அதனை எவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்கின்றனர்.
அதனால் எனது பிள்ளை பிரசவ வலி தாங்காது அதனால் ஆப்ரேஷன் மூலம் குழந்தையை எடுத்து விடுங்கள் என்று கூறுகின்றனர். இன்னும் சில பேர் அம்மாவாசை. அஷ்டமி நவமி போன்ற நாளில் பிரசவம் வேண்டாம் என்றும், சுபமுகூர்த்த நாளில் அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு உள்ளதா எனவும் வாய் கூசாமல் கேட்கின்றனர் அந்த அளவிற்கு இயற்கையாக நடைபெற்ற விஷயங்கள் அனைத்தும் தற்போது நவீன மயமாக்கப்பட்ட மருத்துவ முறையில் செயற்கையாக மாறிக் கொண்டு வருகின்றன.
இதனால் சில நேரங்களில் பிரசவத்தின்போது குழந்தைக்கும், தாய்க்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படுகின்றது இதனை தவிர்க்க சில தனியார் மருத்துவமனைகள் பணத்திற்காக அறுவை சிகிச்சை செய்வதை நிறுத்த வேண்டும்,” என தெரிவித்தார்.