உலக வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுவது அதிகரித்து வரும் நிலையில், இதனால் கடல் நீர்மட்டம் உலகளவில் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், அண்டார்க்டிக் (Antarctic) கண்டத்தில் பனி உருகுவது கடல் மட்டத்தை உயர்த்துவது மட்டுமின்றி, ஆழ்கடல் நீரின் சுழற்சி பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 3.3 மில்லி மீட்டர் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் படி, ஆழ்கடல் நீரின் சுழற்சி கடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த ஆழ்கடல் நீரின் சுழற்சியானது வளிமண்டலத்தில் இருந்து உறிஞ்சப்படும் கார்பனை வரிசைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சரியாகச் சென்று கொண்டிருந்த ஆழ்கடல் நீரின் சுழற்சி தற்போது தலைகீழாக மாறி விட்டதாகத் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக பனிப்பாறைகள் உருகும் அளவு அதிகரித்து வரும் நிலையில், 300 மில்லியன் மக்களின் வாழ்விடங்கள் பறிபோகும் எனவும், 2100 ஆம் ஆண்டில் 200 மில்லியன் மக்கள் நிரந்தரமாக கடலோரத்தில் இருக்கும் குடியிருப்புகளைவிட்டு வெளியேறிவிடுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இதனால், (Antarctic) கடல் பகுதிகளில் மிகவும் ஆபத்தான புயல்கள் உருவாகி மக்களை பாதிக்க வாய்ப்புள்ளதாகவும், பருவநிலையிலும் மிகப்பெரிய மாற்றம் நிகழும் எனவும் எச்சரிகின்றனர் ஆய்வாளர்கள்.