மிக பிரம்மாண்டமாக அமையவுள்ள கலைஞர் நூலகத்தை எண்ணி தமிழனாக பெருமையடைந்தேன்; அமெரிக்க சான் பிரான்சிஸ்கோ பொது நூலகத்தை விடவும் மிகப்பெரும் பரப்பில் நூலகம் அமையவுள்ளது என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:
ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பிரமாண்ட அறிவுக் கருவூலம் “கலைஞர் நூற்றாண்டு நூலகம்”, வரும் ஜூலை 15ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பொது நூலகத்தை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது.
140 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இந்நூலகத்தின் கீழ் 25க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு பருவத்தினருக்குமான நூல்களை வகைப்படுத்தி, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் நிர்வகித்து வருகின்றார்கள். நூலக நிர்வாகத்தினருடன் உரையாடியபோது, நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பிரமாண்டம் என் கண்முன் விரிந்தது.
ஆம்… சான் பிரான்சிஸ்கோ பொது நூலகத்தை விடவும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப்பெரும் பரப்பளவில் – பிரமாண்டமாக – மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணி தமிழனாக பெருமையடைந்தேன். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்கப்படவுள்ள இலட்சக்கணக்கான புத்தகங்களின் வழியாக கலைஞர் என்றும் புகழப்படுவார்.
உலகம் போற்றும் நூலகம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாமதுரையில் ஜூலை 15-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் .