கர்நாடகாவிடம் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை என்றும், கையளவு தண்ணீர் இருந்தாலும் அதனை பங்கிட்டுத் தர வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் (duraimurugan) காட்டமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த நீர் தமிழகத்திற்கு போதுமானதல்ல என்றாலும் கூட, அதைக் கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துறை முருகன், காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு இன்று வரை 102.30 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருப்பதாகக் கூறினார்.
ஆனால், அந்த தண்ணீரை திறக்க மாட்டேன் என்று கூறுவது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் உத்தரவை மீறுவதாகும் என்று தெரிவித்த அவர் ,கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நிலைமையை புரிந்து கொள்ளாமல் தண்ணீரை திறக்க மாட்டோம் என்று கூறுவது வியப்பாக உள்ளது.
மேலும் இது தொடர்பாக வரும் 21ஆம் தேதி காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.அதன் பிறகும் நமக்கு சாதகமான சூழல் இல்லாத பட்சத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழக விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.