நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்கு அரசியல் தலையீடு தான் காரணம் என தெலங்கானா மாநில அமைச்சர் கொண்டா சுரேகா சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.
இதற்கு பலரும் எதிப்பையும் கண்டனங்களையும் தெரிவித்த நிலையில் தற்போது அமைச்சர் சுரேகா தனது கருத்தை திரும்பப் பெற்றுள்ளார்.
கடந்த 2017 அக்டோபரில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கடந்த 2021 அக்டோபரில் இருவரும் பரஸ்பரமாக பிரிய முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர்.
விவாகரத்திற்கு பின்னர் இருவரும் அவர்களது பணிகளை கவனித்து வருகின்றனர். இதனிடையே, நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இந்த நிலையில் தெலங்கானா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரான கொண்டா சுரேகா, சமந்தா – நாகசைதன்யா குறித்து கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறுகையில், “சமந்தா – நாகசைதன்யா பிரிவுக்கு தெலங்கானா முன்னாள் அமைச்சரும், சந்திரசேகர் ராவின் மகனுமான கே.டி.ராமாராவ்தான் காரணம் என்று அமைச்சர் சுரேகா தெரிவித்திருந்தார்.
இதற்கு நடிகர்கள் நாகர்ஜுனா, நாக சைதன்யா, சமந்தா மற்றும் நானி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ், அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனிப்பட்ட நபர்களின் குடும்ப வாழ்க்கையில் அரசியல் செய்ய வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த சூழலில் அமைச்சர் கொண்டா சுரேகா தனது கருத்தை திரும்பப் பெற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
“என்னுடைய அரசியல் பயணத்தில் அரசியல் ஆதாயத்துக்காக யாருடைய குடும்பப் பிரச்சினை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேசியது இல்லை. மேலும், நான் சமந்தா மற்றும் அவரது குடும்பத்தை இழிவுப்படுத்தவில்லை.
நான் எப்போதும் அடிப்படையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைக்க மாட்டேன். எனது பேச்சும், கருத்தும் உங்களை புண்படுத்தி இருந்தால், அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களை இழிவுப்படுத்தும் அரசியல் தலைவரை நோக்கி தான் நான் கேள்விகளை எழுப்பி இருந்தேன். சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் நான் அதனை செய்யவில்லை. சமந்தா நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் குறித்து நான் அறிவேன்” என கூறியுள்ளார்.