சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5,000 பரிசாக வழங்கப்படும் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன் படி, பெண்களுக்கு இலவச பேருந்துப்பயணம், நகை கடன் தள்ளுபடி, என பல்வேறு நலத்திட்டங்கள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சேர்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
சாலை விபத்தில் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்களை பலரும் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிப்பவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் இத்திட்டத்தினை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசர கால உதவிகள் உடனே கிடைக்கப்படும். இதன்படி, ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு இந்த தொகை வழங்கப்படும். மாவட்டம் தோறும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.