MODI SPEECH : பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், இன்று முதல் தென் மாநில அரசியல் சுற்றுப் பயணத்தை துவங்கியுள்ள பிரதமர் நரேந்திர மோடி,
இன்று காலை கன்னியாகுமரியில் உள்ள அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி அரங்கில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சிகாகோ மா நாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆங்கிலத்தில், “எனதருமை சகோதர, சகோதரிகளே” எனக் கூறி துவக்கியது போல, தமிழில் தன் உரையை துவக்கிய அவர், “வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்,திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும்.
கன்னியாகுமரியில் இருந்து கிளம்பியுள்ள அலை நீண்டதூரம் பயணிக்கும். தமிழ்நாட்டில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது.
ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன. ரயில்வே பணிகளுக்காக ரூ.6 ஆயிரத்தி 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணி 2ஜி உள்ளிட்ட ஊழல்கள் நிறைந்த கூட்டணி. பாஜக கன்னியாகுமரியை நேசிக்கிறது, ஆனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது. மீனவ மக்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. பாஜக ஆட்சியில் 5ஜி கொண்டுவந்தோம்; ஆனால் இந்தியா கூட்டணி 2ஜியில் ஊழல் செய்தது; 2ஜி ஊழல் முறைகேட்டில் பெரும் பங்கு வகித்தது திமுகதான்.
திமுக-காங்கிரஸின் இண்டியா கூட்டணியால் தமிழகத்தில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்கவே முடியாது. அவர்களுடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் மோசடியும், ஊழலும்தான் முதன்மையாக இருக்கும்.
அவர்களுடைய கொள்கையே அரசியலில் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குதான். ஒரு பக்கம் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி திட்டங்கள், மற்றொரு பக்கம் இண்டியா கூட்டணியில் கோடிக்கணக்கான ஊழல்கள் இருக்கின்றன.
மக்களை கொள்ளையடிக்கவே எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது. நாட்டை துண்டாட வேண்டும் என நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்.
தமிழகத்தில் இண்டியா கூட்டணி எடுபடாது. திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம்.
நாங்கள் ‘உதான்’ திட்டத்தைக் கொண்டுவந்தோம், கேலோ இந்தியா போட்டியை வெற்றிகரமாக நடத்தினோம்; காமன்வெல்த் போட்டியில் காங்கிரஸ் ஊழல் செய்தது.
இதையும் படிங்க : ”கன்னியாகுமரி வந்த பிரதமர்..”டிடிவி தினகரனுடன் சந்திப்பு?
பாஜக ஏராளமான விமான நிலையங்களை கட்டியது, ஆனால் இண்டியா கூட்டணியில் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடும் ஹெலிகாப்டர் ஊழல் தான் நடந்தது. இந்தப் பட்டியலை சொன்னால் நீளமாக சென்று கொண்டே இருக்கும்.
தமிழகத்தின் பெருமையை, அடையாளத்தை பாதுகாக்க பாஜக என்றும் முன்னணியில் இருக்கிறது. அவர்களின் தூற்றல்களையும். பேச்சுகளையும் நாங்கள் பொருட்படுத்துவதே கிடையாது.
மீனவர்களின் நலனுக்காக பாஜக அரசு பாடுபட்டு வருகிறது. வஉசி துறைமுகத்தை பாஜக புதுப்பித்துள்ளது. வஉசி துறைமுகம் தற்போது மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு திமுக-காங்கிரஸ் தடை விதித்தது. ஆனால் பாஜக அதனை நீக்கியது” எனப் பேசினார் மோடி MODI SPEECH.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் பிரதமர், வரவிருக்கும் 18ஆம் தேதி கோவையிலும், 19ஆம் தேதி சேலத்தில் நடக்கும் பாஜக பொதுக் கூட்டத்திலும் பேசுவார் என கூறப்படுகிறது.