தனது குரங்கு குட்டியை நாய்கள் கொன்றதால், பழிக்கு பழியாக 80 நாய்க்குட்டியை குரங்குகள் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ளது லாவூல் கிராமம். இங்கு வழக்கத்திற்கும் அதிகமாக குரங்குகளும் , நாய்களும் வசிக்கின்றன . இதனால் அடிக்கடி குரங்குகளுக்கும் நாய்களுக்கும் சண்டை நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த கிராமத்தில் வசிக்கும் குரங்கு ஒன்று 80-க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து உள்ளூர் வாசிகள் கூறும்பொழுது;
சில மாதங்களுக்கு முன் இங்கு உள்ள ஒரு குரங்கு குட்டியை சில தெரு நாய்கள் சேர்ந்து கொன்றது. அன்றிலிருந்து கிராமத்தில் உள்ள குரங்குகள் நாய்களை பழிவாங்கும் செயல்களில் ஈடுபட தொடங்கின. இறந்த குரங்கு குட்டியின் மரணத்திற்கு நாய் குட்டிகளை கொன்று தாய் தந்தை குரங்குகள் பழிவாங்குகின்றன.
குரங்குகள் நாய்க்குட்டிகளை எடுத்துச் செல்வதை இங்கு தினமும் காண முடிகிறது. இது வரை சுமார் 80-க்கும் மேற்பட்ட நாய்குட்டிகளை இங்கு உள்ள குரங்குகள் கொன்றுள்ளன.குரங்குகள் நாய்க்குட்டிகளை மரங்கள், கட்டிடங்கள் போன்ற உயரமான இடங்களுக்கு கொண்டு சென்று கீழே வீசி கொல்லுகின்றன.
கிராமத்தில் இப்போது ஒரு நாய்க்குட்டி கூட இல்லை குரங்குகளின் இந்த அதிர்ச்சிகரமான செயலால் நாங்கள் அச்சமடைந்துள்ளோம் . குரங்குகள் வெளியூர்களில் இருந்து வந்து நாய்க்குட்டிகளைத் தேடிக் கொல்வதும் இங்கு நடக்கின்றது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அப்பகுதியை சுற்றியுள்ள குரங்குகளை விரட்ட அப்பகுதியினர் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அதை தொடர்ந்து அந்த கிராமத்திற்கு வந்த வனத்துறையினர் இரண்டு குரங்குகளை பிடித்துள்ளனர்.
இது குறித்து பீட் வன அதிகாரி சச்சின் காண்ட் கூறும் போது ,”இதுவரை, புகைப்படங்களில் லங்கூர் போல தோற்றமளிக்கும் இரண்டு குரங்குகளை நாங்கள் பிடித்துள்ளோம். இரண்டு குரங்குகளும் பீடில் இருந்து நாக்பூருக்கு மாற்றப்பட்டு பின்னர் அருகிலுள்ள காட்டில் விடப்படும் ” என அவர் தெரிவித்தார்.