மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2,100-ஐ தாண்டியுள்ளது.
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ நாட்டில் செப் 8ஆம் தேதி இரவு சரியாக இரவு 11.11 மணிக்கு 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் முக்கிய சுற்றுலா தலமான மராகேஷ் அருகே உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் சுமார் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு உருவானது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
இதுவரை இந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 2,100-ஐ தாண்டியுள்ளது. 2,059 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலநடுக்கத்தில் இந்தியர்கள் யாரும் இதுவரை பலியானதாக தகவல் வெளியாகவில்லை.
மேலும், நிலநடுக்கத்தால் மலைப்பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்திருப்பதால் மீட்பு படையினர் அங்கு செல்வது பெரும் சவாலாக உள்ளது. மேலும் பல வீடுகள் விரிசலடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதனால் அங்குள்ளவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மக்கள் வீடுகளில் தங்குவதற்கு பயந்து வீதிகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் அங்கு மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.