உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம், கண்ணை நம்பாதே (kannai nambathey). நம்பி தியேட்டருக்கு போகலாமா? படம் எப்படியிருக்கு?
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இப்படத்தின் (kannai nambathey) மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. திரில்லர் பாணியில் எடுக்கப்படிருக்கும் இருக்கும் இப்படத்தில், உதயநிதியுடன் சேர்ந்து ஆத்மிகா, பூமிகா, சதீஷ், பிரசன்னா, ஶ்ரீகாந்த் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஒரு கொலையை மறைக்க இன்னொரு கொலை.. இதற்கிடையில் மாட்டிக்கொள்ளும் அப்பாவி ஹீரோவாக உதயநிதி.. சிக்கலில் இருந்து தப்பித்தாரா? என்பதை விவரிக்கிறது திரைக்கதை.
படத்தில், கவிதா கேரக்ட்டரில் பூமிகாவும், அருண் கேரக்ட்டரில் உதயநிதியும் நடித்துள்ளனர்.
அடை மழை பெய்யும் ஓர் இரவில் கார் ஓட்ட முடியாமல் தவிக்கும் கவிதாவிற்கு உதவி செய்கிறார், கதையின் நாயகன் அருண். தன்னை வீட்டில் ட்ராப் செய்துவிட்டு, காரை எடுத்துச் சென்று நாளை காலை திருப்பி தருமாறு கூறுகிறார் கவிதா.
இந்நிலையில், மறுநாள் காரின் டிக்கியை திறந்து பார்த்தால் பூமிகா சடலமாக கிடக்கிறார். அந்த ஒரு இரவில் என்னதான் நடந்தது? கவிதாவின் கொலைக்கு யார் தான் காரணம்? போன்ற பல கேள்விகளுக்கு விடையாக வருகிறது கண்ணை நம்பாதே படத்தின் மீதி கதை.
காதலியின் வீட்டிலேயே வாடகைக்கு குடியிருக்கும் சாதாரண இளைஞராக வரும் உதயநிதி, புது வீட்டிற்கு குடிபெயரும் இவர் தனது புது ரூம்-மெட் பிரசன்னாவை சந்தித்தவுடன் தான் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.
பூமிகாவை, தான் கொலை செய்யவில்லை என்றாலும் புது நண்பனின் பேச்சைக் கேட்டு பிணத்தை அப்புறப்படுத்த முயற்சி செய்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் காதல்-பாடல் என மெதுவாக நகரும் கதை இரவுநேர மழை காட்சிக்கு பின்னர் சூடுபிடிக்கிறது.
மேலும், படத்தின் வேகத்திற்கு ஏற்ப இரவு நேர சென்னை காட்சிகளும், காண்போரை பதைப்பதைக்கச் செய்கிறது. படத்தில், திருப்பத்திற்கு மேல் திருப்பங்களாக அடுக்கியிருக்கிறது.
படத்தின், கிளைமாக்ஸ் காட்சி பார்வையாளர்களை இருக்கை நுனிக்கே வர வைத்து விடுகின்றது. முதலில் அம்மாஞ்சியாக தோன்றும் ஹீரோ இறுதியில் ஹீரோயிசத்தை வெளிப்படுத்துவது சற்று ஏற்றுக்கொள்ள முடியாததாக தான் உள்ளது.
ஹீரோ ஒரு கொலையில் இருந்து நகரும் கதை, மெடிக்கல் மாஃபியா என பயணிப்பது ரசிகர்களை வியப்படைய வைக்கிறது.
ஏதோ பக்கத்து வீட்டு பையன் போல “ஜீ, ப்ரோ” என சொல்லிக்கொண்டு அறிமுகமாகும் பிரசன்னா, சில காட்சிகளுக்குப் பிறகு வில்லனாக விஸ்வரூபம் எடுக்கிறார். இதை, ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ஆக அமைந்ததே, பூமிகாவின் கதாப்பாத்திரம்தான்.
மேலும், பூமிகா சொல்வதை வேத வாக்காக செய்யும் ஆளாக ஸ்ரீகாந்தும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிரார்.
படத்தில், ஆத்மிகாவை பெயருக்கு கதாநாயகியாக வைத்துள்ளனர். சதீஷ் காமெடிக்காக இருக்கிறாரா? கெஸ்ட் ரோலில் வருகிறாரா? என்பது புரியவில்லை.
அதுமட்டுமில்லாமல், எத்தனை முறை சுட முயற்சித்தாலும் அதிலிருந்து ஹீரோ மட்டும் தப்பிக்கும் தேவையில்லாத லாஜிக் இந்த படத்திலும் இடம்பெற்றுள்ளது.
மொத்தத்தில், உடன் பழகுபவர்களை எளிதில் நம்பக்கூடாது எனும் கருத்துடன் முடியும் கண்ணை நம்பாதே (kannai nambathey) படத்தை, ஒரு த்ரில்லிங் அனுபவத்திற்காக தியேட்டரில் போய் பார்க்கலாம்.