இன்று மாலை ஹாரிஸ் ஜெயராஜின் ROCK ON HARRIS இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் ஆண்டனி, வித்யாசாகர், தேவா, அனிருத் என பலரும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ” மறக்குமா நெஞ்சம்” என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி இருந்தார். இந்த இசை நிகழ்ச்சி, குழப்பம், அத்துமீறல், என சர்ச்சையில் முடிந்தது.
இந்த நிலையில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இன்று மாலை ஹாரிஸ் ஜெயராஜின் ROCK ON HARRIS இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை Noise & Grains நிறுவனம் இந்நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, அனுமதி கொடுக்கப்பட்ட அளவில் மட்டுமே இருக்கைகள் இருக்கப்பட வேண்டும். இருக்கைகளுக்கு தகுந்தவாறு மட்டுமே ரசிகர்கள் அமரவைக்கப்பட வேண்டும். எத்தனை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, எவ்வளவு ரூபாய்க்கு டிக்கெட் ஒவ்வொன்றும் விற்பனை செய்யப்பட்டுள்ளன உள்ளிட்ட தகவல்கள் காவல்துறைக்கு அளிக்க வேண்டும்.
மேலும் போதிய அளவு இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடக்கூடாது என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.