நடிகை த்ரிஷா தொடர்பாக மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சையை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்கும் வரை தற்காலிகமாக நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குறோம் என்று நடிகர் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷா தொடர்பாக மன்சூர் அலிகான் பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகை திரிஷா மன்சூர் அலிகான் பேசிய வெடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சு மிகவும் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. இனி வாழ்நாள் முழுள்வதும் எந்த படத்திலும் அவருடன் இணைந்து நடிக்கவே மாட்டேன் என்று தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், நடிகை த்ரிஷாவிற்கு ஆதரவாக திரையுலகினர் பலரும் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் தனது கருத்து தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் வேற வேலை இருந்தா போய் பாருங்க என்றும் பதிலளித்து மன்சூர் அலிகான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதனால் இந்த விவகாரத்தில், தென்னிந்திய நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “திரைத்துறையில் பெண்கள் நுழைவதும் சாதிப்பதும் இன்னும் சவாலாகவே இருக்கும் இன்றைய சூழலில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நடிகைகளை பற்றி இப்படி மோசமான கருத்துகளைத் தெரிவித்தது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகள் உடன் நிற்கும்.
சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகானை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும்போது, தான் உதிர்க்கும் கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம்.
தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என தென்னிந்திய நடிகர் சங்கம் கருதுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.