திமுகவிற்கு தமிழர் விரோத காங்கிரஸ் கூட்டணி அரசியல் ஆதாயம் முக்கியமா? தமிழக நலன் முக்கியமா என்று என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார் .
இதுகுறித்து ராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
தென்னிந்தியாவின், முதல் மாநிலங்களுக்கிடையிலான மெட்ரோவிற்கான (பொம்மசந்திரா – ஓசூர்) ஆய்வு நடத்துவதற்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சாத்தியக்கூறு ஆய்வைத் தயாரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (சிஎம்ஆர்எல்) டெண்டரை வெளியிட்டது. 20.5 கி.மீ. நீளமுள்ள இந்த தடத்தில், 11.7 கி.மீ. கர்நாகவிலும், 8.8 கி.மீ நீளம் தமிழகத்திலும் உள்ளது.
கர்நாடக அரசு (பாஜக அரசு) 2022ல் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறை வளர்ச்சி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி, தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அதிக சிரமமின்றி ஓசூர் மற்றும் பெங்களூரு இடையே பயணிக்க உதவும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள, தமிழக அரசு, சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திற்கு 75 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. இந்த திட்டத்தினால் ஓசூர் நகரம் வளர்ச்சியடைவதோடு, தொழில் முன்னேற்றம், வேலை வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
இந்நிலையில், இந்த திட்டத்தை தற்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசு கைவிட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஓசூர் நகரம் வளர்ந்து விடும் என்றும் இந்த திட்டம் பெங்களூரு நகருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றும், மெட்ரோ இணைப்பினால் ஓசூர் நகரத்தில் தொழில் முன்னேற்றம் அதிகரிப்பதோடு, பெங்களூரு நகர தொழிலதிபர்கள் பலர் தங்கள் தொழிற்சாலைகளை ஓசூருக்கு மாற்றி கொண்டு சென்று விட வாய்ப்புள்ளது என்றும் கட்டமைப்பு திட்டங்களை விட தங்கள் மாநில நலனே முக்கியம் என்று கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் மகனுமான பிரியாங்க் கார்கே அவர்கள் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சியின் தமிழகத்திற்கு எதிரான மனநிலையை வெளிக்காட்டுகிறது.
மத்திய அரசு அனுமதித்த இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டவேண்டும். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை குற்றம் சொல்ல, விமர்சிக்க அஞ்சும் தி மு க, இந்த விவகாரத்தில் மௌனம் சாதித்தால் அது தமிழர்களுக்கு தி மு க இழைக்கும் மாபெரும் துரோகமே ஆகும்.
கூட்டணி கட்சி ஆட்சி என்பதால் நீர் ஆதாரத்தில் சமரசம் செய்யும் தி மு க தற்போது தொழில் முன்னேற்றத்தில், வேலை வாய்ப்பில், வளர்ச்சியில் சுணக்கம் காட்டாமல் கர்நாடக காங்கிரஸ் அரசு மீது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இந்த திட்டத்தை கர்நாடக அரசு எதிர்த்தால், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் கூட்டணியை முறித்து கொள்வோம் என்று சொல்ல தயாரா?
தி மு கவிற்கு தமிழர் விரோத காங்கிரஸ் கூட்டணி அரசியல் ஆதாயம் முக்கியமா? தமிழக நலன் முக்கியமா என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மௌனமோ, எதிர்ப்போ உணர்த்தும் என ராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.