கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்னதாக, அமெரிக்க சந்தையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் க்ரூஸர் மிதிவண்டிகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, அமெரிக்காவில் உள்ள வால்மார்ட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சைக்கிள்களை அறிமுகப்படுத்தி பாராட்டினார்.நீல நிற மிதிவண்டியின் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட சந்து, “மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்! என குறிப்பிட்டுள்ளார்.
லூதியானாவை சேர்ந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த சைக்கிள்களில் முதன்முறையாக வால்மார்ட் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதைக் கண்டு தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2027 ஆம் ஆண்டிற்குள் 10 பில்லியன் டாலர் ஏற்றுமதியை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் என்ற வால்மார்ட்டின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது.
இந்தியாவின் மிதிவண்டி உற்பத்தியாளர்களில் ஒருவரான ஹீரோ ஈகோடெக், வால்மார்ட்டிற்காக “குரூஸர்-ஸ்டைல்” சைக்கிளை வடிவமைத்துள்ளது. இது கான்கார்ட் பிராண்டுடன் பெரிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் வசதிகளுடன் கிடைக்கிறது.
அமெரிக்க வால்மார்ட் ஸ்டோர்களில் விற்கப்படும் க்ரூஸர்கள் இந்தியாவில் இருந்து பெறப்பட்ட 90% மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
வால்மார்ட் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஆண்ட்ரியா ஆல்பிரைட் கூறுகையில், “வால்மார்ட் வாடிக்கையாளர்களின் தயாரிப்புகளுக்கான தேவையை அதிகரிப்பதற்கு இந்தியா நல்ல வாய்ப்பாக உள்ளது, இந்த ஒத்துழைப்பு தங்களின் உலகளாவிய நெகிழ்ச்சித்தன்மையை வலுப்படுத்தும் பணியை மேலும் மேம்படுத்துகிறது என்று கூறினார்.
வால்மார்ட் நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் அபிவிருத்தி முயற்சியை அறிமுகப்படுத்தியது. இது சுமார் 50,000 MSME களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடு களை நவீனமயமாக்கவும், அளவிடவும் உதவுவதன் மூலம் மேக் இன் இந்தியா முயற்சிக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.