இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றின் மாறுபாடான ஒமைக்கரானின் புதிய துணை வகையான பிஏ.2.75 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் பரவத்தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொடர்ந்து டெல்டா, டெல்டா ப்ளஸ் என பல்வேறு உருமாற்றங்கள் அடைந்து அச்சுறுத்தி வந்தது.
இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க நாடுகளில் முதன் முதலாக கொரோனா வைரஸின் மற்றொரு மாதிரியான ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப் பட்டது. அது தொடர்பான ஆய்வுகள் தொடங்கிய போதே ஒமைக்ரான் பிஏ1, பிஏ2, பிஏ3, பிஏ4, பிஏ5 என ஐந்து வகையாக துணை மாற்றங்களை கொண்டிருப்பது தெரிந்தது. இந்த வகை வைரஸ்கள் மிக குறுகிய காலத்திற்குள் உலகின் அனைத்து நாடுகளையும் ஆக்கிரமித்தது.
இந்த நிலையில் பிஏ 2.75 வகை ஓமைக்ரான் வைரஸ் மாதிரிகள், இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூறிய இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெட்ரேயஸ், கடந்த இரண்டு வாரங்களாக 6ல் 4 பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பிஏ5, பிஏ4 ஓமைக்ரான் மாதிரிகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் பிஏ2.75 வகை ஓமைக்ரான் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்த புதிய வகை ஓமைக்ரான் மாதிரி குறித்து கூறிய உலக சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதன், பிஏ 2.75 வகை ஓமைக்ரான் மாதிரிகள், இந்தியாவில் முதல்முதலாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் இதுவரை 10 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.