டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையும், மாநிலங்களவையும் இந்திய தேசிய பறவை மற்றும் தேசிய மலரின் வடிவத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மக்களவை தேசிய பறவையான மயிலின் தோகை வடிவத்துடன் கம்பளங்களால் அலகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் மாநிலங்களவை தேசிய மலரான தாமரையின் வடிவத்தையும் அதன் நிறத்தையும் வெளிப்படுத்தும் வகையில் கம்பளங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய மலரை குறிப்பதால் கம்பளத்தின் வடிவம் அதன் நிறம் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டு இந்திய அடையாளத்தை தெரிவிக்கும் வகையில் இந்த கம்பளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதேபோல் மக்களவையில் பயன்படுத்தப்பட்டுள்ள கம்பளங்களில் மயில் தோகை வடிவம் இடம் பெற்றுள்ளது. நாட்டின் தேசிய பறவையான மயிலுக்கு இந்திய கலாச்சாரத்தில் சிறப்பான இடம் உள்ளது. அழகு, கருணையின் வடிவமாக மயில் பறவை பார்க்கப்படுகிறது. இதன் பெருமையையும், இயற்கை பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விதத்தில் மயில் தொகை வடிவில் கம்பளங்கள் உருவாக்கப்பட்டு மக்களவையில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அவைகளில் தரையில் விரிக்கப்பட்டுள்ள இந்த கம்பளங்கள் தயாரிக்கும் பணி உத்திரபிரதேசத்தின் மிர்சாப்பூரில் செயல்படும் ‘ஓபீட்டி’ என்ற நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது. 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த நிறுவனம் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டதாகும். இயந்திரங்களின் உதவி இல்லாமல், வெறும் கைகளால் இங்கு கம்பளங்கள் நெய்யப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கம்பளங்கள் உலகின் பல முக்கிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பிரபலமான இடங்கள், விடுதிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்த கம்பளங்கள் அனுப்பப்பட்டு பெயர் பெற்றுள்ளன.
900 கலைஞர்கள் 10 லட்சம் மணி நேரம் அயராது பணியாற்றி தயாரித்த மயில், தாமரை வடிவம் பொறித்த கம்பளங்களால் புதிய நாடாளுமன்றம் அலங்கரிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இத்தகைய அழகிய கம்பளங்கள் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன், அமெரிக்காவின் நியூ யார்க்கில் உள்ள மரியாட் எசக்ஸ் ஹவுஸ், தி ஒபராய் மராகெச் மொராக்கோ, சிகாகோவில் உள்ள சோகோ ஹவுஸ் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 1995-ம் ஆண்டு இந்தியா வந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், மிர்சாபூரில் உள்ள இந்த கம்பள நிறுவனத்தை பார்வையிட்டார்.
கம்பளம் தயாரிப்பு பணியில் உ.பி பாதோகி மற்றும் மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 900 கலைஞர்கள் ஈடுபட்டனர். இவர்கள் 10 லட்சம் மணி நேரம் அயராது பணியாற்றி இந்த கம்பளங்களை தயாரித்துள்ளனர். மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும் தலா 17,500 சதுர அடி பரப்பளவில் இந்த கம்பளங்கள் தயாரிக்கப்பட்டடுள்ளன. ஒவ்வொரு அவைக்கும் 150-க்கும் மேற்பட்ட கம்பளங்கள் தயாரிக்கப்பட்டு அவை ஒன்றாக இணைக்கப்பட்டு, அரைவட்ட வடிவில் கம்பளம் பொருத்தப்பட்டுள்ளன. 2021-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட கம்பளம் நெய்யும் பணி 2022 மே மாதம் முடிவடைந்தது.
கம்பளத்தை தரையில் பொருத்தும் பணி கடந்தாண்டு நவம்பரில் தொடங்கியது. அதிக அடர்த்தியுள்ள இந்த கம்பளம் தயாரிக்க 7 மாதங்கள் ஆனதாகவும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தங்களது கையினால் நெய்யப்பட்ட கம்பளங்கள் விரிக்கப்பட்டு இருப்பது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்றும் கம்பளங்களை நெய்து கொடுத்த அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.