போதையில் யானையை தொந்தரவு செய்த நபரின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்று வட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுவது உண்டு. அந்த வகையில் சுற்றுலா செல்லும் பயணிகள் யானை ,கரடி ,மான் உள்ளிட்ட விலங்குகளை பார்வையிட்டு உணவு வழங்கி புகைப்படம் எடுப்பது வழக்கம்.
இந்த நிலையில் மதுபோதையில் சாலையோரத்தில் ஒருவர் யானையை தொந்தரவு செய்துள்ளார். இதனை கண்ட சுற்றுலா பயணிகள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர். மேலும் இந்த வீடியோவை பார்த்த வனத்துறையினர், சம்பந்தப்பட்ட அந்த நபரை தேடி வந்தனர்.
அப்போது நடத்திய விசாரணையில் எட்டிக்குட்டை கிராமத்தை சேர்ந்த மீசை முருகேசன் என்பவர் தெரியவந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தர்மபுரி ,ஒகேனக்கல் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் அங்கு இருக்கும் வனவிலங்குகளை புண்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.