ஹைதராபாத்தில் நேற்று காலமான நடிகர் சரத் பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி சடங்கு நடத்தப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
71 வயதான நடிகர் சரத்பாபு பல்வேறு உடல் நல கோளாறுகளால் கடந்த ஒரு மாத காலமாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்து போனதால் நேற்று அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டு சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் பல மொழிகளில் பிரபலமான படைப்புகளுக்கு சரத்பாபு என்றென்றும் நினைவு கூறப்படுவார் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் சரத்பாபு நடித்த தமிழ் திரைப்படங்களை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார் தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வலம் வந்தவர் நடிகர் சரத்பாபு என்றும் முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து போன்ற படங்கள் தமிழ் ரசிகர்களால் என்றென்றும் நினைவு கூறப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். நடிகர் சரத் பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் திரை உலகினருக்கு தாம் ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாகவும் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடிகர் கமலஹாசன், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல துறை பிரபலங்கள் நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன்,கவிஞர் வைரமுத்து உள்ளிட்டுவர்களும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரை உலகில் சாதனை படைத்த நடிகர் சரத்பாபு சொந்த வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்தவர். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த புகழ் பெற்ற சரத்பாபு செப்சிஸ் என்ற அரிய நோய் தாக்குதலால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். சரத்பாபுவின் உடலுக்கு திரை உலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த நடிகர் சரத்பாபுவுக்கு இரண்டு மனைவிகள். 1971 ஆம் ஆண்டு தெலுங்கு,தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த நடிகை ரமா பிரபாவை முதலில் அவர் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் விவகாரத்து செய்துவிட்டனர். அதன் பின்னர் நடிகர் சரத்பாபு எம் என் நம்பியாரின் மகள் சினேகா தீட்சித் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஜோடியும் 10 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு பிரிந்தது. திரை வாழ்வில் சரத் பாபு வெற்றி பெற்றாலும் திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்தார் என்பது வருத்தத்துக்குரிய செய்தி. கடைசி காலத்தில் தனிமையில் வாழ்ந்து வந்த நடிகர் சரத்பாபு உறவினர்களின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு மிகவும் நெருக்கமான நடிகர் என்று கருதப்படும் நடிகர் சரத்பாபுவின் மறைவுக்கு ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எனது அருமை நண்பரே இழந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் கமலஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் எனது குருநாதர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட சரத்பாபு அழியாத பல கதாபாத்திரங்களை ஏற்றவர் அவரது உயிரிழப்பு திரை உலகத்துக்கு பேரிழப்பு என்று கூறியுள்ளார்.
200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் சரத்பாபுவுக்கு சென்னையிலும் ஹைதராபாதிலும் நிறைய சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூருவிலும் நடிகர் சரத்பாபுவுக்கு வீடுகள், நிலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தனது சகோதரரின் குழந்தைகளை தனது குழந்தைகளாக வளர்த்து வந்த நடிகர் சரத்பாபு தனது சொத்துக்களை 13 பங்குகளாக பிரித்து சகோதர சகோதரிகளின் குழந்தைகளுக்கு வழங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படி பிரித்த சொத்துக்களும் போக மீதமுள்ள சொத்துக்களை பிரிப்பதில் அவரது உறவினர்களிடையே போட்டா போட்டி நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த பிரச்சனைகள் நடிகர் சரத்பாபுவின் இறுதி சடங்குகள் அமைதியாக முடிவடைந்த பின் கிளம்பும் என்றும் செய்திகள் உலா வருகின்றன. ஆனால் இந்த செய்திகளில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை.