கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழகத்தின் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை, உடனடியாக அமைத்து மக்களின் தாகம் தணித்திடும் அறப்பணிகளில் ஈடுபடுமாறு அதிமுகவினருக்கு புரட்சித்தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் தொண்டே மகேச தொண்டு எனமக்களுக்குத் தொண்டாற்றுவதிலும், மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டும் செயல்பட்டு வரும் ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
புரட்சித்தலைவர் எம்.ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் வழியில் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கழகப் பணிகளையும், மக்கள் பணிகளையும் தொய்வில்லாமல் துடிப்புடன் ஆற்றி வருவதை நான் நன்கு அறிவேன்.
தற்போது எந்த ஆண்டும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதால், இந்த கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் தாங்கள் வாழும் பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமையுங்கள்.
25-4-2024 வியாழக்கிழமை காலை முதல், மக்களின் தாகத்தை தணிக்கும் அறப்பணிகளில் ஈடுபடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் அமைக்கப்படும் தண்ணீர் பந்தல்களை கழக நிர்வாகிகள், காலையில் ஒருமுறையும், பிற்பகல் ஒருமுறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.