ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய அன்புமணி , தமிழகத்துக்கு மத்தியில் இருந்து திட்டங்களே வருவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகிக்கிறது. அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து, பா.ம.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். சந்திரபாபு நாயுடு போட்டியிடும் குப்பம் தொகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் தமிழில் பேசி அவருக்கு வாக்கு சேகரித்தார்.

3 நாட்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. நம்முடைய சகோதரர் என்னுடைய நண்பர் சந்திரசேகர…. சந்திரபாபு பெரு பெற்றி பெற்று இந்த குப்பம் தொகுதியில் மட்டுமல்ல ஆந்திராவின் முதலமைச்சராக வரவேண்டும் என்று சந்திரசேகரா? சந்திரபாபு நாயுடுவா என்று மேடையிலே அவர் குழம்பியதும் கீழே இருந்து விசில் சத்தம் பறந்தது.
தமிழ்நாட்டின் பனிஷ்மெண்ட் பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் போல இருந்த குப்பம் தொகுதியை சந்திரபாபு நாயுடு வந்து மாற்றியிருக்கிறார்.
இன்று மருத்துவக்கல்லூரி, தொழில்கல்லூரி எல்லாம் இங்கு வந்திருப்பதற்கு காரணம் சந்திரபாபு நாயுடுதான்.
இஸ்ரேலுக்கு சென்று அங்கிருந்த திட்டங்களை இங்குள்ள விவசாயிகளுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
விவசாயிகளுக்கு அரசு திட்டங்களில் 90% மானியம் கொடுத்திருக்கிறார்.

மதராஸ் மாகாணமாக இருந்தபோது கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, சினிமா எடுக்க என இங்கிருந்து சென்னைக்கு சென்றனர்.
ஆனால், ஒருங்கிணைந்த ஆந்திரா உருவான பின்னர், சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு எல்லோரையும் வரவைத்தவர் சந்திரபாபு நாயுடு என்று அவர் பேச கைத்தட்டல் அதிகரித்தது.
குறைந்தது 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற வேண்டும் என்பது எனது ஆசை.
அவர் முதலமைச்சரானதும், வன்னியருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை முன்வைப்பேன். நான் உங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தருகிறேன் என்று உறுதிபடக் கூறினார்.
சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக வந்தால்தான் ஆந்திரமாநிலம் வளம் பெறும் வளர்ச்சி பெறும். மத்தியிலும் தேசிய ஜனநாயக் கூட்டணி வரவேண்டும்.
தமிழ்நாட்டில் திமுக, மத்திய பா.ஜ.கவுடன் சண்டை போடுவதால், தமிழ்நாட்டுக்கு திட்டங்களே மத்தியில் இருந்து வருவதில்லை. நிதியும் கிடைப்பதில்லை.

தமிழக அரசு சரியான அணுகுமுறையில் நடந்து கொள்வதில்லை.
தமிழ்நாடு போன்ற நிலை ஆந்திராவுக்கு வரக்கூடாது என்றார்.
கூட்டமேடையிலேயே, மத்திய அரசு தமிழகத்துக்கு திட்டங்கள் தரவில்லை என்பதை அன்புமணி ராமதாஸ் ஒப்புக் கொண்டது, கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசு பொருளானது.