ஆவடி அருகே வீடுபுகுந்து சித்தமருத்துவர் மற்றும் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வடமாநில இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆவடி அருகே உள்ளமிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியில் வசித்து வந்தவர்கள் சிவன் நாயர் மற்றும் பிரசன்ன குமாரி தம்பதி.
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சிவன் நாயர் தற்போது சித்தா மருத்துவராக வீட்டிலேயே சிறிய கிளினிக் ஒன்று நடத்தி வந்துள்ளார்..
இவரது மனைவி பிரசன்னா குமாரி மத்திய அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
இவர்களது மகன் அண்ணனூர் பகுதியில் தங்கியிருந்து சித்த மருத்துவம் பார்த்து வருவதாகவும், இவரது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஓய்வு எடுக்க குடும்பத்தோடு கொடைக்கானல் புறப்பட்ட முதலமைச்சர்
நேற்று மாலை சிவன் நாயர் வழக்கம் போல அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
அப்போது சிகிச்சை பெறுவது போல வந்த மர்ம கும்பல் ஒன்று சிவன் நாயரைக் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது மனைவி பிரசன்னா குமாரியையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
வீட்டிலிருந்து சிலர் வேகமாக ஓடுவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கும் சென்று பார்த்த போது சிவன் நாயர் மற்றும்
அவரது மனைவி பிரசன்னா குமாரி ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
சம்பவம் குறித்து உடனடியாக முத்தாபுதுப்பேட்டைக் காவல் நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுபேட்டை போலீசார் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து தடயங்களைச் சேகரித்து வருகின்றனர்.
மேலும் இவர்களது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோப்பநாய் மற்றும் அங்கிருந்த சிசிடிவி உதவியுடன் அடுத்தகட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆவடி காவல் ஆணையரக துணை ஆணையர் அய்மன் ஜமால் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை தொடங்கினர்.
கொலைக்கான கரணம் சரியாகத் தெரியாத நிலையில், கொலை நகை பணத்தைக் கொள்ளைக்காக நடந்ததா இல்லை குடும்ப தகராறு காரணமாகக் கொலை நடந்திருக்குமா என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான பல்வேறு அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் இரட்டை கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இரட்டை கொலை தொடர்பாக சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த சோதனையின் போது சம்பந்தப்பட்ட இடத்திற்கு அருகில் செல்போன் ஒன்று வீதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்குச் சொந்தமானது. இதன் அடிப்படையில் மகேஷிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மோசடி நிறுவன உரிமையாளரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் – அன்புமணி ஆவேசம்!