நாடு முழுவதும் உள்ள மக்கள் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கர்நாடகா மாநிலத்தில் சில பகுதிகளில் சாவர்க்கரின் போஸ்டர்கள் வைத்து விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடிய சம்பவம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சாவர்க்கரைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாநிலம் தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பாஜக அனைத்து மண்டலங்களிலும் அவரது படங்களைக் காண்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. பெலகாவியில் உள்ள பாஜக தலைவர்கள், விழாக்காலம் முடியும் வரை சாவர்க்கரின் சுவரொட்டிகள், பேனர்கள் மற்றும் படங்களை வைக்குமாறு மண்டலங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெலகாவி வடக்கு எம்.எல்.ஏ., அனில் பெனகே, நகரத்தில் உள்ள 200 கணேஷ் மண்டலங்களில் தலா ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் படத்தை விநியோகிப்பதாக கூறினார்.
இந்நிலையில் தான் விநாயகர் சதுர்த்தியையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களில் ஹிந்து அமைப்புகள் பிரமாண்டமான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த விநாயகர் சிலைகளின் முன்பு சாவர்க்கரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பான பேனரில் சாவர்க்கரின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. சில இடங்களில் சாவர்க்கர் தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து , பெலகாவி, தார்வார், பெங்களூர் உள்பட பல இடங்களில் விநாயகர் சிலைகளின் அருகே சாவர்க்கர் போட்டோ வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் மற்றும் துமகூருவில் சாவர்க்கர் படத்துடன் வைக்கப்பட்ட கட்அவுட்டுகள் அகற்றப்பட்டன. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெங்களூர் சாம்ராஜ் பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அங்கு பதற்றம் நிலவிய நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் இந்த ஆண்டு கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை பரபரப்பான சூழலில் கொண்டாடப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.