சாதிய வன்மத்தோடு செயல்படும் சிலர், தங்களது குடிநீர் தொட்டியை உடைத்துவிட்டதால், பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள் முதுகுளத்தூர் அருகே உள்ள இந்திராநகரைச் சேர்ந்த பெண்கள்.
சமூக நீதி பேசும் திராவிடமாடல் ஆட்சியில் இதுபோன்ற சாதிய கொடுமையா? என்ன நடந்தது அங்கு…
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சாம்பக்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது இந்திரா நகர் பகுதி. இங்கு பட்டியலினத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியின் வளர்ச்சி குறித்து சாம்பக்குளம் ஊராட்சியில் இருந்து கண்டு கொள்வதில்லை என்றும் கிராமத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், இந்திராநகர் பகுதி மக்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அவர்களே ஒன்று சேர்ந்து குடிநீர் தொட்டி ஒன்று அமைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வாக்களிக்கும் சிறுவன்; வைரலாகும் வீடியோ? – என்னாச்சு தேர்தல் ஆணையத்துக்கு?
சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் தொட்டியை அமைத்து அதிலிருந்து தண்ணீரைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்தக் குடிநீர் தொட்டியை, சாம்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் சாதியவன்மத்தோடு இரவு நேரத்தில் ட்ரிலிங் மெஷினைக் கொண்டு சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கேட்ட, அந்தப் பகுதி பெண்களிடம் சாதி குறித்து வன்மத்தோடும், இழிவோடும் , அநாகரிகமாகவும் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட இந்திராநகரைச் சேர்ந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்காக வரும் எதையும் சாம்பக்குளம் கிராமத்தினர் தடுத்துவிடுவதாகவும், குடிநீர் தொட்டியை உடைத்தவர்கள் உங்களால் என்ன செய்யமுடியும் என்று கேட்டதாகவும் பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என்றும், தங்கள் பிள்ளைகளையும் தாக்குவதாகக் கூறுவதால் பள்ளிக்கு அனுப்ப பயமாக இருப்பதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களிடம் முதுகுளத்தூர் டிஎஸ்பி சின்னக்கண்ணு நேரில் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்.