திசைதிருப்பும் கருத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாபஸ் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் தமிழகத்தின் தென்மாவட்ட மழை , வெள்ளப் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், மீட்புப் பணிகளை பொறுத்தவரை மத்திய அரசின் அனைத்து துறைகளும் ஒத்துழைத்து களத்தில் பணிபுரிந்தன. மேலும் ஸ்ரீவைகுண்டம் ரயிலில் சிக்கிய 800க்கும் மேற்பட்ட பயணிகளைரயில்வே சார்பில் மீட்கப்பட்டனர். தேசிய பேரிடர் என்றும் அறிவிக்கும் சிஸ்டமே இல்லை. தேசிய பேரிடராக மத்திய அரசு இதுவரை அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது. வேறு எந்த மாநிலத்துக்கும் தேசிய பேரிடர் என்று அறிவித்தது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் திசைதிருப்பும் கருத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாபஸ் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
நான்கு மாவட்ட மழைவெள்ளத்தைப் பற்றி 12 ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் சொல்லிவிட்டது என்கிறார் நிதியமைச்சர்.அப்படியென்றால் 17 மாலை 6 மணிக்கு காசி தமிழ்ச்சங்க இரயிலின் துவக்கவிழாவை பிரதமரே நடத்திவைத்தாரே எப்படி? கொட்டும் பேய்மழையில் எண்ணிலடங்கா பயணிகளை பணயம் வைத்தாரே எப்படி?
அன்றைய தினம் கடும்மழையால் தென்மாவட்டங்களில் பல இரயில்களை ரத்து செய்யமுடியாமல் போனதற்கு இவ்விழாவே காரணம் என இரயில்வே அதிகாரிகள் பலர் புலம்பியதை அறிவீர்களா? வானிலையின் இவ்வளவுப் பெரிய எச்சரிக்கையை மீறி செந்தூர் எக்ஸ்பிரஸ் மாலை 7 மணிக்கு புறப்பட்டதும், ஶ்ரீவைகுண்டத்தில் அது சிக்கிக்கொண்டு பயணிகள் இரண்டு நாட்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானதற்கும் யார் பொறுப்பு?
தனது அரசின் கீழ் இயங்கும் வானிலை அறிக்கையை அறியாத பிரமதமரா? அல்லது என்னவானாலும் என்ன.. தமிழ்நாட்டு மக்கள் தானே என்ற மனநிலையா?
நிதியமைச்சர் அவர்களே! மழை வெள்ள அபாயத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லிவிட்டோம் என்று தாங்கள் சொன்ன திசைதிருப்பும் கருத்தை வாபஸ் பெறுங்கள். இல்லையென்றால் இந்த கருத்துக்கான பதிலை பிரதமரிடம் கேட்டுபெறுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.