புதுக்கோட்டைக்கு நாளை மறுநாள் (மே 30 ) வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
2024 ஆம், ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 கட்ட லோக்சபா தேர்தல்கள் முடிவடைந்து விட்டன. மேலும் ஜுன் 1ம் தேதி 7 வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை மறுநாள் மீண்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்.தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மொத்தமுள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது.
இந்த தேர்தலையொட்டி பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பாஜக மூத்த தலைவர்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:”தியானம்.. தியானம்…”மோடி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் செயல் – SDPI கடும் தாக்கு!
அன்றைய தினம் அவர் சிவகங்கை லோக்சபா தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து வாகன பேரணி செய்வதாகவம், திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் – அருள்மிகு ராஜராஜேஸ்வரி உடனுரை சத்யவாகீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்றைய தினம் திருமயம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மழை பெய்தது.இதனால் மதுரையில் இருந்து அமித்ஷா செல்லும் ஹெலிகாப்டர் திருமயத்தில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷாவின் சாமி தரிசனம் மற்றும் அங்கு நடைபெற இருந்த வாகன பேரணி ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் தான் மிஸ்ஸான திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் (மே 30 ) தமிழகம் வருகிறார். அவர் மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கி அங்கிருந்து திருமயம் கோட்டை பைரவர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார்.