கோவை நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தைப் பொறுத்தவரை ‘இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு அமைப்பிற்கு வழங்கியதில் ஏன் இவ்வளவு தாமதம் ஏன் எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தமிழக காவல்துறையை சிறப்பாக செயல்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டியுள்ளார்.
கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. எந்த சமரசமும் இன்றி பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு மேற்கத்திய கல்விமுறை சார்ந்து கற்பிக்கப்பட்டது. இதில் நல்ல விஷயங்கள் இருந்தாலும், இப்போதைக்கு தேவைப்படுகிற கல்வி முறையில் நமது கலாச்சாரம் குறித்தும் பண்பாடு குறித்தும் எடுத்துரைத்து முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கல்வி முறை இப்போது தேவைப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தீவிரவாதத்தை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைய வேண்டும். தீவிரவாதம் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு கோவை மாவட்டம் பெயர் போன இடமாக மாறி வருகிறது.
நமது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க நினைக்கும் மற்ற நாடுகள் நம் மீது பல்வேறு வகையில் தாக்குதல்களை நடத்துகின்றன.அதற்கு நாம் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம். இதில் மிகவும் முக்கியமானது தீவிரவாத தாக்குதல்.இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே இது தீவிரவாத தாக்குதல் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டது. நமது நாட்டின் சிறந்த காவல் துறைகளில் ஒன்று தமிழ்நாடு காவல்துறை என்று தெரிவித்தார்.
ஆனால், இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு ஏஜென்சியிடம் ஒப்படைப்பதில் ஏன் இவ்வளவு காலதாமதம் என்ற கேள்வி எழுந்துள்ளது. தீவிரவாதத் தாக்குதல்கள் என்று வரும்போது, அந்தச் சம்பவத்திற்குப் பிறகு வரும் நிமிடங்கள் முக்கியமானவை. ஆனால் நான்கு நாட்களுக்கு பிறகு தேசிய பாதுகாப்பு அமைப்பிற்கு கொடுத்துள்ளோம்.
இதுபோன்ற வாய்ப்புகளை பயங்கரவாதிகளுக்கு வழங்கக்கூடாது. இந்தியாவின் நலனுக்காக பயங்கரவாதத்தின் மீது மென்மையான பார்வை இல்லை. தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்தது. எனவே தேசிய பாதுகாப்பு அமைப்பிற்கு நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது. ஆனால் முடிவெடுப்பவர்கள் ஏன் தாமதப்படுத்தினார்கள்? என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முன்பு நான் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பயங்கரவாத அமைப்பு என்று தமிழக காவல்துறை என்னிடம் தெரிவித்தது. அந்த வகையில் தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட முடியும் என்பது எனக்கு தெரியும்,” என்றார்.