மாடுகளை திருடிச் சென்ற மர்ம நபர், அதை தேடுவதை அறிந்ததும், பதறியடித்து மாடுகளை கட்டிவைத்திருக்கும் இடத்தின் லோகேஷனை அட்டையில் எழுதி திருடிய இடத்திலேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அந்த திருடர் குல திலகத்தினை போலீசார் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நடந்த இந்த சுவாரஸ்ய திருட்டு சம்பவம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார்குடியிருப்பைச் சேர்ந்தவர் பட்டுராஜ்.
இவருக்கு சொந்தமான தோட்டம் புதுக்குளம் சந்திப்பு பகுதியில் உள்ளது.
அந்த தோட்டத்தில் 5க்கும் மேற்பட்ட பால்மாடுகளை பட்டுராஜ் வளர்த்து வருகிறார்.
இந்த மாடுகளில் இருந்து தினமும் பால்கறந்து அந்தப் பகுதியில் பால் விற்பனையும் செய்து வந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டுராஜ் தோட்டத்திற்கு சென்றபோது அங்கு கட்டப்பட்டிருந்த மாடுகளில் 2 மாடுகள் திருடு போனது தெரியவந்தது.
அருகே உள்ள இடங்களில் தேடிப்பார்த்தும் மாடுகள் கிடைக்கவில்லை.
இதனால் தோட்டத்தில் இருந்து மாடுகள் மாயமானது குறித்து பட்டுராஜ் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதோடு விடாமல், தனது மாடுகளை கண்டுபிடிப்பதற்காக அந்தப் பகுதியில் இருந்த இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் தீவிரமாக சோதனை செய்துள்ளார்.
மேலும் வள்ளியூர் மற்றும் மேலப்பாளையம் பகுதியில் நடக்கும் மாட்டுச்சந்தைக்கு சென்று தனது மாடுகளின் புகைப்படத்தை காண்பித்து யாரும் கொண்டு வந்தால் தனக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கூறியுள்ளார்.
இப்படி தனது மாடுகளைத் தேடி அதிரடியாக பட்டுராஜ் பலவகையிலும் தேடுதலில் ஈடுபட்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பட்டுராஜ் வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது தோட்டத்தின் வாசலில் இருந்த வேலியில் ஒரு அட்டை கட்டப்பட்டிருந்தது.
அந்த அட்டையில் “உங்களது மாடு சங்கரன்குடியிரப்பு கெபி அருகே உள்ள புளியமரத்து அடியில் கட்டப்பட்டுள்ளது. இட்டமொழி ரோடு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மாடுகளை பட்டுராஜ் தீவிரமாக தேடி வந்ததால் எங்கே தான் சிக்கிக் கொள்வோமோ என்று பயந்து மாட்டைத் திருடிய மர்மநபரே மாடு இருக்கும் இடத்தை அட்டையில் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.
உடனே பட்டுராஜ், அதில் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு நண்பருடன் வேகமாக சென்றார்.
அங்கு அவரது 2 மாடுகளும் கட்டப்பட்டிருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தவர், மாடுகளை அவிழ்த்து தனது தோட்டத்திற்கு கொண்டு வந்தார்.
மாடுகள் திரும்பக் கிடைத்தது குறித்து பட்டுராஜ், சாத்தான்குளம் போலீசிலும் தகவல் தெரிவித்துள்ளார்.
மாடுகளை திருடியதோடு, அதனை கட்டி வைத்த இடத்தின் லொகேஷனையும் சொன்ன அந்த திருடர் குல திலகம் யார் என்று போலீசார் இன்னும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மாட்டை திருடிய நபரே அது இருக்கும் இடத்தின் தகவலையும் தெரிவித்துள்ள இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.