சிங்கப்பூரில் இருந்து பெங்களூருக்கு கடத்தி வரப்பட்ட 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து பெங்களூரூ தேவனஹள்ளியில் உள்ள, கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிகள் விமானம் வந்தது.
அந்த விமானத்தில் சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு உளவுத் துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் உடன் இணைந்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது பயணிகளில் ஒருவர் வித்தியாசமாக நடந்து கொள்ளவே, அவரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, அந்தப் பயணி தனது உள்ளாடைக்குள் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவர் மறைத்து வைத்திருந்த கடத்தல் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.
கடத்திவரப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 55 லட்சம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: புதையல் எடுத்து தருவதாக ரூ.7 லட்சம் அபேஸ்; சிக்கிய டுபாக்கூர் கொல்லிமலை சாமியார்கள்
இதையடுத்து வெளிநாட்டிலிருந்து தங்கக் கடத்தலில் ஈடுபட்ட அந்த பயணியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவரது பெயர் மற்றும் மற்ற விபரங்கள் குறித்த எந்த தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
விமான நிலையங்களில் இப்படி பயணிகள் மூலமாக தங்கக் கடத்தல் நடப்பது பிடிபடும் நிலையில், கேட்பாரற்று விமான நிலைய கழிவறையின் குப்பைத் தொட்டிகளில் இருந்தும் தங்கம் கைப்பற்றப்படுகிறது.
தொழில்போட்டியில் கடத்தல் தங்கம் குறித்து காட்டிக் கொடுத்துவிடுவார்கள் என்று பயந்து தங்கத்தை விட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாடுகளைவிட இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால், கூடுதல் லாபம் பார்க்கும் நோக்கத்தில் அங்கிருந்து தங்கத்தை கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.