JaganMohanReddy : ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் வரிப்பணம் 500 கோடி ரூபாயில் சொகுசு பங்களாவை கட்டியிருப்பதாக ஆளும் தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தை தலைநகராக அறிவித்ததும், அங்கு ஜெகன் தங்குவதற்கு சொகுசு பங்களா மிகவும் ரகசியமாக கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த பகுதியில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழலில் தெலுங்குதேசம் ஆட்சி வந்ததும் முன்னாள் அமைச்சர் கண்டா ஸ்ரீநிவாச ராவ், செய்தியாளர்களை அழைத்து கொண்டு அந்த சொகுசு பங்களாக்களை சுற்றி பார்க்க சென்றார்.
அங்கு மொத்தம் 7 சொகுசு பங்களாக்கள் அருகருகே கட்டப்பட்டுள்ளன. ரூ.500 கோடிக்கும் மேல் மக்கள்பணத்தை செலவு செய்துள்ளனர்.
இங்கு ஒவ்வொரு அறையிலும் டோட்டோ பிராண்ட் கம்மோடுகள் (பேசின்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒன்றின் விலை மட்டும் ரூ. 9 லட்சம் முதல் ரூ.15.5 லட்சம் வரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கழிவறையில் குளிக்கும் டப்கள் அமைக்கப்பட்டுள்ளது இதன் விலை குறைந்த பட்சம் ரூ. 12 லட்சம் என கூறப்படுகிறது. கழிவறையில் ஏசி வசதியும் உள்ளது.
ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ.1 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கழிவறையும் 480 சதுர அடியில் கட்டியுள்ளனர். தற்பொழுது இவற்றின் வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது ஆந்திர மாநிலத்தில் வைரல் ஆகி ஆந்திர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.