கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சராக பொறுப்பேற்க போவது சித்தராமையாவா அல்லது சிவக்குமாரா என்ற சர்ச்சை ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையாவை முதல்வராகவும், துணை முதல்வராக டி கே சிவக்குமாரையும் நியமிப்பதில் கட்சி தலைமை சமாதான நடவடிக்கையில் வெற்றி கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய முதலமைச்சராக பொறுப்பேற்பதில் சித்தராமையாவுக்கும், சிவக்குமாருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில் இருவரையும் சமாதானம் செய்யும் நடவடிக்கையில் ராகுல் காந்தியும், கட்சியின் தேசிய தலைவர் மல்லிக்கார்ஜுன கார்கேவும் மும்முரமாக ஈடுபட்டனர்.
சமாதான நடவடிக்கையில் கட்சித்தலைமை :
முதலில் சித்தராமையாவை டெல்லிக்கு அழைத்த கார்கே, கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது குறித்து விரிவாக விவாதித்தார். ஆனால், முதலமைச்சர் பதவியை வேறு அமைச்சர் பதவியையோ ஏற்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துவந்த சிவக்குமார், பதவிக்காக தான் யாருடைய முதுகிலும் குத்தமாட்டேன் என்றும், பதவியை கேட்டு யாரையும் மிரட்ட மாட்டேன் என்று தெரிவித்தார்.
ஆனால், கட்சியின் வெற்றிகாக அயராது பாடுபட்ட சிவக்குமாரை தவிர்த்து அமைச்சரவையை அமைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த காங்கிரஸ் தலைமை இருவரையும் சமாதானபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. டி கே சிவக்குமாரையும் டெல்லிக்கு அழைத்த கார்கே அவருடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
ராகுல் காந்தியின் ஆலோசனையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த சமாதான நடவடிக்கையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக. தெரிகிறது. அதாவது, சித்தராமையாவை முதலமைச்சராக்குவது என்றும் டி கே சிவக்குமாரை துணை முதல்வராக்குவது என்பதில் தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆனால், 5 ஆண்டுகால ஆட்சியில் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், பின்னர் இரண்டரை ஆண்டுகள் டி கே சிவக்குமாரும் முதலமைச்சர் பதவியை அளிப்பது என்றும் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் டி கே சிவக்குமார் வசமே நீடிக்கவும் சித்தராமையா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி இந்த இருவரையும் ஆலோசித்தே எந்தவொரு இறுதி முடிவையும் கர்நாடகாவில் எடுக்கும் என்றும் டெல்லியில் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கர்நாடகாவை பொறுத்தவரை இந்த இரு. தலைவர்களுமே எங்களுக்கு முக்கியமானவர்கள் என்றும் கட்சி வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
இருவருக்கும் இடையே மோதல் நிலவுவதாக ஊடகங்கள் தான் இதனை பெரிதாக்குகின்றன என்றும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள டி கே சிவக்குமாரை சம்மதிக்க வைக்க ஏதுவாக, அவரது ஆதரவாளர்களுக்கும் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை அளிக்க உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
பெங்களுருவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் :
பெங்களுருவில் இன்று நடைபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இது தொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. இதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் அனைத்து எம் எல் ஏக்கள், எம்.பி.க்களுக்கு தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் படி கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த கூட்டம் பெங்களுரு குயின்ஸ் சாலையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றிரவு 7. மணிக்கு நடைபெறுகிறது. புதிய முதலமைச்சரும், புதியஅமைச்சரவையும் வருகிற 20 ஆம் தேதி பிற்பகல் 12.30 க்கும் பதவியேற்க இருக்கிறது. கண்டீரவா மைதானத்தில் இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கட்சி தலைமை. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் ஏகோபித்த ஆதரவை சித்தராமையாவும், டி கே சிவக்குமாரும் பெற்றிருக்கும்நிலையில், சுழற்சி முறை பதவி பரிமாற்றத்திற்கு ஒப்புக்கொண்டதின் மூலம் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் சித்தராமையாவே சாதித்து விட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யார் இந்த சித்தராமையா :
மைசூர் மாவட்டத்தின் வருணா ஹோப்பியில் உள்ள கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி விவசாய குடும்பத்தை சேர்ந்த சித்தராம கவுடா, போரம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்த சித்தராமையா மைசூரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தார்.
மாணவ பருவத்தில் சிறந்த பேச்சாளராக திகழ்ந்த சித்தராமையா டாக்டர் ராம் மனோகர் லோஹியாவாலின் பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு சோசலிச கொள்கையில் கவரப்பட்டார். 1968 ஆம் ஆண்டு மைசூரின் சீனியர் வழக்கறிஞரான நஞ்சுண்டசாமியிடம் ஜீனியராக சேர்ந்த சித்தராமையா சட்டக்கல்லுரியில் சட்டப் பேராசியரியராக சில காலம் பணியாற்றினார்.
பின்னர் பாரதிய லோக் தள் கட்சியில் இணைந்து 1983 ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பபேரவை தேர்தலில் தனது முதல் தேர்தல் வெற்றியை சுவைத்தார்.1994 இல் ஜனதா தள ஆதரவுடன் ஆடசியை கைப்பற்றிய தேவ கௌடா ஆட்சியில் நிதித்துறை அமைச்சராக தேர்வு செய்யபட்ட சித்தராமையா, கர்நாடகாவில் 13 முறை நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த முதல் நபராவார். பின்னர் மதசார்பற்ற ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்ட சித்தராமையா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பெல்லாரி சலோ போராட்டம்:
கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களை எதிர்த்து பெங்களுருவில் இருந்து பெல்லாரி வரை சித்தராமையா தலைமையில் சுமார் 320 கிலோமீட்டர்தூரம் வரை பேரணி நடைப்பெற்றது. இந்த பேரணி அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
2013 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சித்தராமையா அம்மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்ப்பட்டார். தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வருணா தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா மொத்தம் 1,19.816 வாக்குகளை பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சோமன்னாவைவிட 73,653 வாக்குகள் கூடுதல் பெற்றார்.
சித்தராமையா மீண்டும் கர்நாடகா முதல்வராக பதவியேற்க விருக்கும் நிலையில், அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ”லீடர் ராமையா ”திரைப்படமும் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த டி கே சிவக்குமார் :
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை டி கே சிவக்குமார் மிகவும் நம்பிக்கைக்குரிய, விசுவாசமான தலைவர் என்பதில் சந்தேகமில்லை. காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் சிவக்குமார், கட்சி பிரச்சனையில் சிக்கும் போதெல்லாம் ஆபத்பாந்தவனாக வந்த நிற்பார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து வந்தால், அதனை காப்பாற்ற எம்.எல்.ஏக்களை ஒருங்கிணைத்து ஆட்சியை காப்பாற்றுவதில் வல்லவர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இவர் ஒரு Trouble Shooter. கர்நாடகா மட்டுமல்லாது அண்டை மாநிலமான மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் அரசை காப்பாற்றியதில் டி கே சிவக்குமாருக்கு முக்கிய பங்கு உண்டு.
முதல்வர் ஆக வேண்டும் என்ற இலக்குடன் செயலாற்றி வரும் டி கே சிவக்குமார் அந்த நாற்காலியை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார் என்று அவரது நட்பு வட்டாரங்கள் கூறுகின்றன.காங்கிரஸ் கட்சியினரால்”ரிசார்ட் அரசியல்வாதி” என்று அன்புடன் அழைக்கப்படும் டி கே சிவகுமார் தற்பொழுது இல்லாவிட்டாலும் விரைவில் தனது முதலமைச்சர் பதவியை அடைந்தே தீருவார் என்றும் அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.