கமுதி அருகே வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நடைபெற்ற உணவுத் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளை மாணவிகள் சமைத்து காட்சிப்படுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூரில் நம்மாழ்வார் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி இந்தக் கல்லூரியில் உணவுத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கமுதி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரமாபிரபா, உணவுத்திருவிழாவினை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், கல்லூரி தாளாளர் அகமது யாசின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
25 குழுக்களாக பிரிக்கப்பட்டு மாணவ மாணவிகள் 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகளை சமைத்தனர்.
கேஸ் இன்றி, கிராமத்து பாரம்பரிய முறையில் விறகு அடுப்பில் மாணவ மாணவிகள் உணவுப் பொருட்களை சமைத்தனர்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பஞ்சாப், மத்திய பிரதேஷ் ,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உணவுப் பொருட்களை மாணவிகள் சமைத்து காட்சிப் படுத்தினர்.
உணவு திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாணவ – மாணவிகள் சமைத்த உணவினை ரசித்து ருசித்து சாப்பிட்டு, பாராட்டினர்.
உணவு திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஐந்தாயிரம், 2ம் பரிசாக 3000,மூன்றாம் பரிசாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது.
பாரம்பரிய உணவு வகைகளை பரவலாக்கும் நோக்கத்தோடும், இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வை மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாகவும் இந்த உணவுத் திருவிழா நடத்தப்பட்டது.
முன்னதாக உணவுத் திருவிழாவில் ஒயிலாட்டம், காவடி ஆட்டம், கும்மியாட்டம், புலியாட்டம் ஆடி சிறப்பு விருந்தினர்களை உற்சாகப்படுத்தினர்.