தூத்துக்குடியில் வக்கீல் குமாஸ்தாவை குத்திக் கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி குரூஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் வக்கீல் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு பால்ராஜ் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி சென்றுள்ளார். ஆனால் இரவு மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரைத் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்று (மே11) அதிகாலை மத்திய பாகம் காவல் நிலையம் அருகே கிரேட் காட்டன் சாலையில் உள்ள ஒரு பேட்டையில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது வக்கீல் குமாஸ்தா பால்ராஜ்தான் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதையடுத்து மத்தியபாகம் காவல்துறையினர் பால்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குமாஸ்தா பால்ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், நண்பர்களுடன் மது குடிக்க சென்ற இடத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் முதற்கட்டமாகத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பால்ராஜை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குற்றவாளியை மத்திய பாகம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வக்கீல் குமாஸ்தா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: ”விதிகளை மீறினால் குண்டாஸ் பாயும்… ”- பட்டாசு உரிமையாளர்களுக்கு ஆட்சியர் அலெர்ட்!